சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறை அது பாடிப் பிச்சைக்கு
பண் - திருநேரிசை:கொல்லி   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc
7.021   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
பண் - நட்டராகம்   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை)

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.043   மறை அது பாடிப் பிச்சைக்கு  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) ; (திருத்தலம் அருள்தரு திருமேற்றளிநாயகி உடனுறை அருள்மிகு திருமேற்றளிநாதர் திருவடிகள் போற்றி )
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.

[1]
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[2]
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த,
பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.

[3]
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும்
வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[4]
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி,
தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.

[5]
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.

[6]
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.

[7]
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி
கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.

[8]
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக்
கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[9]
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.021   நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு திருமேற்றளியீசுவரர் திருவடிகள் போற்றி )
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற
சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும்
எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .

[1]
ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்
கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்;
சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும்
மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .

[2]
மோறாந்து ஓர் ஒரு கால் நினையாது இருந்தாலும்,
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே!
சேறு ஆர் தண் கழனித் திரு மேற்றளி உறையும்
ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே .

[3]
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன்;
எற்றால் என் குறைவு? என் இடரைத் துறந்தொழிந்தேன்;
செற்றாய், மும்மதிலும்! திரு மேற்றளி உறையும்
பற்றே! நுன்னை அல்லால் பணிந்து ஏத்த மாட்டேனே .

[4]
எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு இறந்தொழிந்தார்;
மெய்ம் மால் ஆயின தீர்த்து அருள் செயும் மெய்ப்பொருளே!
கைம்மா ஈர் உரியாய்! கனம் மேற்றளி உறையும்
பெம்மான்! உன்னை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே .

[5]
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே
ஊன் நேர் இவ் உடலம் புகுந்தாய்; என் ஒண்சுடரே!
தேனே! இன்னமுதே! திரு மேற்றளி உறையும்
கோனே! உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே .

[6]
கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே,
எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்!
செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும்
ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

[7]
விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி உன்னை அல்லால்,
உரையேன், நா அதனால், உடலில் உயிர் உள்ளளவும்;
திரை ஆர் தண்கழனித் திரு மேற்றளி உறையும்
அரையா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

[8]
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே;
தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்;
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும்
மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே .

[9]
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச்
சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை
ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list